அக்சய் குமார், சயிப் அலிகான் நடிப்பில் வெளியான ‘ஹைவான்’ திரைப்படம், உலகளவில் கடந்த 7 நாட்களில் ரூ.15 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அக்சய் குமார் மற்றும் சயிப் அலிகான் இணைந்து நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘ஒப்பம்’ திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ஹைவான்’ உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஷிரியா பில்கோன்கர், சாயாமி கேர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமார் ரூ.115 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் வாரத்தில் ‘ஹைவான்’ திரைப்படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என கூறப்படுகிறது.
Advertisement
இதுவரை உலக அளவில் மொத்தமாக ரூ.15 கோடி மட்டுமே வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே அதன் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் ரூ.80 கோடிக்கு சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் நிறுவனத்தால் வாங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்படவிருந்த பெரும் நஷ்டம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், ‘ஹைவான்’ திரைப்படம் தயாரிப்பாளருக்கு ரூ.10 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.