சென்னை–பெங்களூரு புல்லட் ரெயில் திட்டம்: பணிகளுக்கான டெண்டர் வெளியீடு
சென்னை இருந்து பெங்களூரு வரை அமைக்கப்பட உள்ள அதிவேக புல்லட் ரெயில் திட்டத்திற்கான கட்டுமான மற்றும் தொடர்புடைய பணிகளுக்காக தேசிய அதிவேக ரெயில் கழகம் (NHSRCL) டெண்டர் வெளியிட்டுள்ளது.திருத்தப்பட்ட வழித்தட வரைபடத்தின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அதிவேக ரெயில் பாதை மொத்தம் 306 கிலோமீட்டர் நீளமுடையதாக இருக்கும்.இந்த வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், கோலார், கொடிஹள்ளி, ஒயிட்பீல்டு மற்றும் பெங்களூரு ஆகிய 8 முக்கிய நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மணிக்கு 350 கி.மீ.வேகத்தில் இயக்கப்படும் இந்த புல்லட் ரெயில் சேவை அறிமுகமானால், தற்போது சுமார் 7 மணி நேரம் ஆகும் சென்னை–பெங்களூரு பயண நேரம் 73 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையின் முதல் புல்லட் ரெயில் நிலையம், சென்னை புறநகர் ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்படும்.
மேலும், அது சென்னை சென்ட்ரல் மற்றும் மெட்ரோ நிலையங்களுடன் நடைபாதை இணைப்புகள் மூலம் இணைக்கப்படும்.மொத்த 306 கி.மீ. பாதையில் சுமார் 28 கி.மீ.நிலத்தடி சுரங்கப்பாதையாக அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை 2035ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், திட்டத்தின் மதிப்பீட்டு செலவு ரூ.18,000 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.