திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் கனமழையையும் பொருட்படுத்தாமல், குடைகளைப் பிடித்தபடி நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்ற மதுப்பிரியர்களின் காட்சி அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற்று, அதற்காக ரூ.10 வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மதுபானங்கள் வாங்க முடியாமல் மதுப்பிரியர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கிடையே, திறந்திருந்த சில டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் திரண்டது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த ஒரு கடையில் மதுபானங்கள் வாங்குவதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் கடையின் முன்பகுதியில் கூட்டம் அதிகரித்தது. சென்னையில் முரசு புயலின் தாக்கத்தால் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
Advertisement
இதன் தொடர்ச்சியாக செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இருப்பினும், அங்குள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் வாங்குவதற்காக ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். மழை தொடர்ந்து பெய்தபோதும், குடைகளைப் பிடித்தபடி நீண்ட வரிசையில் ஒழுங்காக நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர். மழையையும் பொருட்படுத்தாமல் மதுபானங்கள் வாங்குவதற்காக அவர்கள் காத்திருந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. “வெயிலோ, புயல் மழையோ... நாங்க வாங்காமல் போக மாட்டோம்” என்ற தொனியில் அமைந்துள்ள இந்தக் காட்சிகள், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதனைப் பார்த்த இணையவாசிகள் வியப்பையும் பல்வேறு கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், அரசின் உத்தரவை மீறி தன்னிச்சையாக கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது நிர்வாகம் கடுமையான துறைரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சில ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.