ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூர் சாலையில் பழுதாகி நின்ற கரும்பு லாரியை காட்டு யானைகள் கூட்டமாக சூழ்ந்து, அதில் இருந்த கரும்புகளை பறித்து தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்–மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தற்போது கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, வனப்பாதை வழியாக ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கரும்பின் வாசனையால் ஈர்க்கப்படும் காட்டு யானைகள், அவ்வப்போது சாலைக்கு வந்து லாரிகளை வழிமறித்து கரும்புகளை பறித்து சாப்பிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை தமிழக–கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள ஆசனூர் அருகே கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
Advertisement
எதிர்பாராதவிதமாக லாரி பழுதானதால், அது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் கூட்டம், பழுதாகி நின்ற லாரியை சுற்றி வளைத்தது. லாரியின் அருகே சென்ற யானைகள் தும்பிக்கையை பயன்படுத்தி அதில் இருந்த கரும்புக் கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிடத் தொடங்கின. சாலையோரத்தில் லாரியைச் சுற்றி யானைகள் நின்று கரும்புகளை சாப்பிட்டதால், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சமடைந்தனர். அவர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியதால், சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் கரும்புகளை சாப்பிட்ட யானைகள் பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பிறகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. யானைகள் லாரியை முற்றுகையிட்டு கரும்புகளை சாப்பிட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.