சிசிடிவி கேமரா முன் பாட்டு பாடி கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பு விடுத்த நபர்: கேரளாவில் சுவாரசியம்!
கிரகப்பிரவேச விழாவுக்கான அழைப்பிதழை வழங்க உறவினர் வீட்டுக்குச் சென்ற நபருக்கு, அங்கு வீடு பூட்டியிருந்தது. இதனால் திரும்பிச் செல்லாமல், வாசலில் இருந்த சிசிடிவி கேமரா முன்பு நின்று பாடல் பாடியபடியே தனது அழைப்பை பதிவு செய்த சம்பவம் கேரளாவில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தனது புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவுக்காக உறவினர்களை நேரில் அழைத்து வந்துள்ளார். அந்த வகையில், உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது, அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது.அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவை கவனித்த அவர், கேமரா பதிவில் தன்னுடைய தகவலை தெரிவிக்க முடிவு செய்தார். கேமரா முன் நின்ற அவர், தனது சூழ்நிலையை நகைச்சுவையாக பாடல் வடிவில் கூறினார்.வீட்டுக்குத் தேவையான பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை ஏற்கனவே வாங்கிவிட்டதாகவும், எனவே விழாவுக்கு வருபவர்கள் எந்தப் பொருளை பரிசாகக் கொண்டு வந்தாலும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தனக்கு அதிகளவில் கடன் இருப்பதால், பொருட்களுக்கு பதிலாக பணமாக வழங்கினால் அது மிகவும் உதவியாக இருக்கும் என்றும் பாடலாகவே குறிப்பிட்டுள்ளார்.தனக்கு பரிசுப் பொருட்களைவிட பண உதவியே தேவையாக இருப்பதை அவர் வெளிப்படையாகவும், நகைச்சுவை கலந்து கலகலப்பாகவும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்துள்ளார்.பின்னர் வீட்டுக்கு வந்த உறவினர்கள், சிசிடிவி காட்சிகளைப் பார்த்துள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில், தற்போது அது வைரலாகி வருகிறது.பொதுவாக தங்களது கடன் சுமை மற்றும் பணத் தேவைகள் குறித்து வெளிப்படையாக பேச பலரும் தயங்கும் நிலையில், இந்த நபர் அதையே நகைச்சுவையாக சிசிடிவி கேமரா மூலம் தெரிவித்த விதம் சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.