சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா கோலாகலம்: தவக்கோலத்தில் அம்பாளுக்கு காட்சி அளித்த சங்கரநாராயணர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி இன்று (28-7-2026) கோலாகலமாக நடைபெற்றது.இந்த திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான கோமதி அம்மன் தேரோட்டம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஆடித்தபசு விழாவின் 11-ம் நாள் நிகழ்வையொட்டி இன்று காலை கோவிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதையடுத்து மதியம் 12 மணிக்கு மேல் கோமதி அம்பாள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் அமைந்துள்ள ஆடித்தபசு மண்டபத்திற்கு சென்றார்.
மாலை 4.30 மணிக்கு மேல் சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்காக புறப்பட்டார்.மாலை 6.45 மணியளவில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சங்கரநாராயண சுவாமி, தவக்கோலத்தில் இருந்த கோமதி அம்பாளுக்கு காட்சி அளித்தார். இந்த அரிய நிகழ்வை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 11.45 மணிக்கு யானை வாகனத்தில் எழுந்தருளிய சங்கரலிங்க சுவாமி கோமதி அம்பாளுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.ஆடித்தபசு விழாவை காண தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சங்கரன்கோவிலுக்கு வந்தனர். பக்தர்களின் வசதிக்காகதேவையான அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.