கேரளாவின் பாரம்பரிய திருவிழா ‘ஓணம் பண்டிகை’
கேரள மக்கள் சாதி, மதம், இனம் உள்ளிட்ட வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான பாரம்பரிய விழா ஓணம். ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மகாபலி சக்கரவர்த்தி தனது மக்களை காண பூமிக்கு வருவார் என்பது கேரள மக்களின் நம்பிக்கை. அவரை வரவேற்கும் விதமாகவே ஓணம் கொண்டாடப்படுகிறது.ஓணம் காலத்தில் கேரளம் முழுவதும் புத்தாடைகள் அணிவது, வீட்டு வாசல்களில் பூக்கோலம் அமைப்பது, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, பாரம்பரிய உணவுகள் மற்றும் பலகாரங்களை தயாரிப்பது என விழாக்கோலம் பூணும். கேரளத்தைத் தவிர தென்தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.மகாபலி சக்கரவர்த்தியின் கதைகேரளத்தை ஆட்சி செய்த மகாபலி சக்கரவர்த்தி அசுர குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனது மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரது ஆட்சியில் பசி, வறுமை, அநீதி போன்றவை இல்லாமல் மக்கள் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அனைவரையும் சமமாக நடத்தி வந்த அவரது புகழ் மூவுலகிலும் பரவியது.தர்மம் மற்றும் கொடையில் சிறந்து விளங்கிய மகாபலி, பின்னர் மூவுலகையும் ஆட்சி செய்யத் தொடங்கினார். இதனால், தன்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்ற எண்ணம் அவரிடம் உருவானதாக புராணக் கதை கூறுகிறது.மகாபலியின் செல்வாக்கு அதிகரித்ததைக் கண்டு தேவர்கள் அச்சமடைந்தனர். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். இதற்கிடையில், தனது குருவான சுக்ராச்சாரியாரின் ஆசீர்வாதத்துடன் மகாபலி ஒரு பெரிய யாகத்தை நடத்தினார். யாகம் நிறைவடையும் நேரத்தில் தானம் கேட்டு வருபவர்களுக்கு எதையும் மறுக்காமல் வழங்குவது அவரது வழக்கமாக இருந்தது.அப்போது மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில், சிறுவனின் குள்ள வடிவில் யாகம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரைக் கண்ட மகாபலி, என்ன தானம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு வாமனர் மூன்று அடி நிலம் மட்டுமே வேண்டும் எனக் கேட்டார்.இதைக் கேட்ட மகாபலி அதை எளிதான தானமாகக் கருதி சம்மதிக்கத் தயாரானார். ஆனால், வந்திருப்பவர் சாதாரண சிறுவன் அல்ல; மகாவிஷ்ணுவே வாமன வடிவில் வந்துள்ளார் என்பதை சுக்ராச்சாரியார் மகாபலிக்கு எடுத்துரைத்தார். எனவே, அந்தத் தானத்தை வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.எனினும், யாகம் நிறைவடையும் தருவாயில் கொடுத்த வாக்கை மீற மகாபலி விரும்பவில்லை.