குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து உயர்வு; மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தற்காலிக தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழையின் தாக்கத்தால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவியதால், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. புலியருவியும் தண்ணீரின்றி வறண்ட நிலையில் இருந்ததால், அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான சாரல் மழை பெய்ததன் காரணமாக, நேற்று முதல் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அருவிகளில் தண்ணீர் சீராக பாய்ந்து வருகிறது. இதுவரை வறண்டிருந்த புலியருவிக்கும் மீண்டும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.மேலும், குற்றாலம் மற்றும் இலஞ்சி பகுதிகளில் மாலை நேரத்திலும் சாரல் மழை பெய்தது.