கான்பூர்–மதுரை, பிரயாக்ராஜ்–நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பயணிகள் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், உத்தரபிரதேசத்தின் கான்பூர் சென்டிரல்–மதுரை மற்றும் பிரயாக்ராஜ்–திருநெல்வேலி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கான்பூர் சென்டிரலில் இருந்து ஆகஸ்டு 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 01925), மூன்றாவது நாள் காலை 7.15 மணிக்கு மதுரையை அடையும்.மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து ஆகஸ்டு 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 01926), மூன்றாவது நாள் காலை 4.30 மணிக்கு கான்பூர் சென்டிரலை சென்றடையும்.
22 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயில், தமிழ்நாட்டில் திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல், பிரயாக்ராஜில் இருந்து ஆகஸ்டு 1, 8, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) காலை 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 04171), மூன்றாவது நாள் மதியம் 1.15 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.இதன் திரும்பும் சேவையாக, திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்டு 3, 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 04172), நான்காவது நாள் அதிகாலை 3.30 மணிக்கு பிரயாக்ராஜை சென்றடையும்.19 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.கான்பூர் சென்டிரல்–மதுரை சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது.
பிரயாக்ராஜ்–திருநெல்வேலி சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (31-ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.