ஒவ்வொரு டாஸ்மாக் கடை அருகிலும் தானியங்கி எந்திரம்: தமிழக அரசு திட்டம்..!
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் காலி மதுபாட்டில்களை எளிதாகத் திரும்ப ஒப்படைக்கும் வகையில், சுமார் 4 ஆயிரம் நவீன தானியங்கி எந்திரங்களை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் காலி மதுபாட்டில்கள் முறையாக திரும்பப் பெறப்பட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை நீதிபதிகள் சதீஷ்குமார், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பொதுமக்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் சுமார் 4,000 தானியங்கி எந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு டாஸ்மாக் மதுபானக் கடைக்கும் அருகில் தலா ஒரு எந்திரத்தை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.