தமிழகத்தில் தொடர்ந்து எழும் சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளும், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்களும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் முதலீடு செய்ய தொழில்முனைவோர் முன்வர மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இத்தனை கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்துள்ளது. கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பெருமளவில் வளர்ந்துள்ள தற்போதைய காலகட்டத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்குகிறது. மேலும், தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது, கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
Advertisement
இத்தகைய சூழலில் தமிழகத்தில் முதலீடு செய்ய எந்தத் தொழில்முனைவோரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் இத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரிப்பதுடன், சமூக அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் தமிழகத்தை நோக்கித் தொழில்துறையினர் வருவதற்குத் தயங்கும் நிலை உருவாகும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்கு அரசு கடுமையான நடவடிக்கைகள் மூலம் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், தமிழகத்தின் எதிர்கால நிலை கேள்விக்குறியாகும். இதனை வருத்தத்துடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஈ.ஆர். ஈஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.