அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு: 20% வரை மிகை ஊதியம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவு
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 2025–26ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதம் வரை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் அதிகபட்சம் ரூ.16,800 வரை பெற வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தொழிலாளர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, திறமையான மனிதவளம் மற்றும் அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் முக்கியக் காரணங்களாக உள்ளன. உற்பத்தி, வாகனத் தயாரிப்பு, பொறியியல், ஜவுளி, தோல் பொருட்கள், மருந்துகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கும் தொழிலாளர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் 2025–26ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். யாருக்கு எவ்வளவு போனஸ்? ஊதியச் சட்டத் தொகுப்பு, 2019-ன் விதிகளின்படி, மிகை ஊதியம் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 ஆகவும், மிகை ஊதியத்தைக் கணக்கிடுவதற்கான மாதச் சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பில் தளர்வு அளித்து, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுள்ள ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்களுக்கு பின்வரும் அடிப்படையில் தொகை வழங்கப்பட உள்ளது. 1. லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்களுக்கு, அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையின் அடிப்படையில் 8.33% மிகை ஊதியமும், 11.67% கருணைத் தொகையும் வழங்கப்படும். இதன்படி மொத்தமாக 20% வரை தொகை கிடைக்கும். 2. மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33% மிகை ஊதியமும், 11.67% கருணைத் தொகையும் என மொத்தம் 20% வழங்கப்படும்.