இந்தியா தலைமையில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

12 Sep 2026 www.thinathulir.com

இந்தியா தலைமையில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்

இந்தியா தலைமையில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்

18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மாநாட்டில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளை உள்ளடக்கிய பிரிக் கூட்டமைப்பு கடந்த 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணைந்ததை தொடர்ந்து, இந்த அமைப்பு ‘பிரிக்ஸ்’ என அழைக்கப்பட்டது. பொருளாதாரம், வர்த்தகம், சர்வதேச அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன் தொடர்ச்சியாக எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்தன. இதனால் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மேலும், பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இணைப்பு நாடுகளாக உள்ளன. பிரிக்ஸ் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு உறுப்பு நாடு மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறது. இந்தக் கூட்டங்களில் சர்வதேச அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தற்போது பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இதையடுத்து, 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. 'வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான மாநாடு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாநாட்டின் நிறைவில், பிரிக்ஸ் அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான கூட்டறிக்கை வெளியிடப்பட உள்ளது. இந்த கூட்டறிக்கையை இந்தியா வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் * இந்திய பிரதமர் – நரேந்திர மோடி * ரஷிய அதிபர் – விளாடிமிர் புதின் * தென் ஆப்பிரிக்க அதிபர் – சிரில் ராமபோசா * பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சர் – மவுரோ வெய்ரா * ஈரான் அதிபர் – மசூத் பெசஸ்கியான் * இந்தோனேசிய அதிபர் – பிரபோவா சுபியாந்தோ * எத்தியோப்பியா பிரதமர் – அபே அகமது அலி * மலேசியா பிரதமர் – அன்வர் இப்ராகிம் * சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் – பைசல் பின் பர்கன் அல் சவுத் * ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் – ஷேக் கலீத் பின் முகமது பின் சயது அல் அயான் * உகாண்டா துணை அதிபர் – ஜெசிகா அலொபோ * நைஜீரியா துணை ஜனாதிபதி – கசீம் ஷெடிமா * கியூபா வெளியுறவுத்துறை அமைச்சர் – புருனோ ரெட்ரிகியூஸ் பரிலா * பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் – மெக்சிம் ரெசன்கொவ் * வியட்நாம் பிரதமர் – லி மின் ஹங் * கஜகஸ்தான் அதிபர் – காசிம் ஜோமார்ட் டோகாயேவ் * ஐநா பொதுச்செயலாளர் – அன்டோனியோ குட்டரெஸ்