ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் புதுக்கோட்டைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 26 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடத்தலில் ஈடுபட்டதாக இரண்டு பெண்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று (வெள்ளிக்கிழமை) ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரின் ரகசியப் பகுதியில் மூட்டைகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில், சுமார் ரூ.13 லட்சம் மதிப்புடைய 26 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Advertisement
மேலும், இந்த கடத்தலில் தொடர்புடைய புதுக்கோட்டை திருவப்பூர் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த வசந்தி மற்றும் அவரது சகோதரி மகள் சண்முகப்பிரியா ஆகிய இருவரையும் போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை காரில் கொண்டு வந்து புதுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் உள்ளூர் முகவர்களிடம் விநியோகம் செய்ய இருவரும் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் பின்னணியில் செயல்படும் முக்கிய நபர்கள் யார், காரை ஓட்டி வந்தவர் யார் என்பது உள்ளிட்ட விவரங்களைக் கண்டறிய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.