தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வீட்டின் முன்பு நின்றிருந்த 16 வயது சிறுவனை பைக்கில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பணம் கேட்டு தாக்கிய நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், சிறுவனை மிரட்டி தங்களது பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளது. பின்னர், அவனிடம் பணம் கேட்டு சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கும்பலிடம் இருந்து தப்பிய சிறுவனை, அவர்கள் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
Advertisement
தாக்குதலில் காயமடைந்த சிறுவன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றான். இதுகுறித்து சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, கோவில்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த பலவேசத்தின் மகன் யுவன்பாரத் (21), சாஸ்திரி நகரைச் சேர்ந்த கொம்பையாவின் மகன் மாடசாமி (21), மணிகண்டனின் மகன் சூர்யா (19), காளிபாண்டியின் மகன் ஆனந்த் (20) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.