டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் வணிகம் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு, இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. வாழ்வாதாரத்துக்காக வியாபாரம் செய்வதைவிட போராட்டம் நடத்தும் உரிமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியில் அடிக்கடி நடைபெறும் போராட்டங்களால் அப்பகுதி வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பண்டிகைக் காலத்தில் இத்தகைய போராட்டங்கள் தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டு, ராகுல் காந்திக்கு ஏற்கனவே இரண்டு முறை வணிகர்கள் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.சி.பார்தியா நேற்று ராகுல் காந்திக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஜனநாயக உரிமைகளையும் வணிகர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அரசியல் தலைவர்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குடிமக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும், பேச்சுரிமையைப் பயன்படுத்துவதற்கும், அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கும் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளைத் தாங்கள் மதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், போராட்டம் என்ற பெயரில் வணிகச் செயல்பாடுகளை முடக்குவதோ, பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதோ, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார். போராட்டம் நடத்துவதற்கான உரிமையை ஆதரிப்பது போலவே, தொழில் செய்வதற்கும் வணிகத்தில் ஈடுபடுவதற்கும் அரசியலமைப்பு அளித்துள்ள உரிமைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக, குறிப்பாக பண்டிகைக் காலத்தில், டெல்லியில் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களால் அங்குள்ள வணிகர்கள் குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும், கடிதத்தில் வணிகர்கள் தரப்பில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வியாபாரம் செய்து வருமானம் ஈட்டுவதற்கான உரிமையைவிட போராட்டம் நடத்துவதற்கான உரிமை உயர்ந்ததா? நாட்டின் தலைநகரில் வர்த்தக நடவடிக்கைகளை முடக்குவது அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் சரியான செயலா? போராட்டங்களால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு வணிகர்களுக்கு யார் நிவாரணம் வழங்குவார்கள்? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தொடர் போராட்டங்களால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளுக்கு ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் பொறுப்பேற்குமா என்றும் வினவப்பட்டுள்ளது. அரசியல் மோதல்களில் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது ஒரு பொருட்டாகக் கருதப்படவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இதேபோன்ற நீண்டகால இடையூறு காரணமாகத் தங்களது சொந்தத் தொழில், வருமானம் அல்லது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டால் அரசியல் தலைவர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெரியவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத பாதிப்புகளைச் சிறு வணிகர்கள் மட்டும் அமைதியாகச் சகித்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன் என்றும் கேட்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களின் நிலையைப் புரிந்துகொண்டு, பொறுப்புடனும் மனிதாபிமானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. எனவே, ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் வணிக நிறுவனங்கள், பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில், போராட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை உறுதிசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வணிகர்களின் கோரிக்கைகளை ராகுல் காந்தி தீவிரமாகப் பரிசீலித்து உரிய பதிலளிப்பதுடன், அதற்கேற்ப பொறுப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்வார் என எதிர்பார்ப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.