புயலில் உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில், அவர்களின் குடும்பங்களுக்கு வெறும் ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்குவது போதாது என்றும், தலா ரூ.50 லட்சம் நிவாரணத்துடன் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் முரசு புயலில் சிக்கி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்துகின்றன. கடலை நம்பி வாழ்வாதாரத்திற்காக உழைக்கச் சென்ற மீனவர்கள், உயிரற்ற உடல்களாக கரை திரும்பும் துயரத்தை மீனவ மக்கள் இன்னும் எத்தனை காலம் எதிர்கொள்ள வேண்டும்? உயிரிழந்த மீனவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கெடுத்து, ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். முரசு புயலால் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிப் படகுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் நடுக்கடலில் படகின் இயந்திரமும் பழுதடைந்துள்ளது. ஆபத்தில் சிக்கிய மீனவர்கள் உதவி கோரியபோதும், உரிய நேரத்தில் அரசு தரப்பில் மீட்பு உதவி கிடைக்காததால் அவர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது. மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தமிழ்நாடு அரசின் அலட்சியமான செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மீனவர்கள் எப்போது உதவி கோரினார்கள்? அவர்களின் அவசர அழைப்பு அரசுக்கு எப்போது கிடைத்தது? அதன்பிறகு அரசு மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன? மீனவர்களை உயிருடன் மீட்பதில் எங்கு தவறு நிகழ்ந்தது? இக்கேள்விகளுக்கு தவெக அரசு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும். புயல் எச்சரிக்கை விடுப்பதோடு அரசின் கடமை முடிந்துவிடுகிறதா? ஏற்கெனவே கடலுக்குச் சென்ற மீனவர்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பியதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இல்லையா? மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். மீனவர்களின் குடியிருப்புகளை அகற்றி புதிய தலைமைச் செயலகம் அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை, அவர்களின் உயிரைப் பாதுகாப்பதிலும் முதல்வர் காட்ட வேண்டும். மீனவர்கள் வசிக்கும் கடற்கரை நிலம் அரசின் பார்வைக்குத் தெரிகிறது. ஆனால், கடலில் அன்றாடம் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களின் துயரங்கள் அரசுக்குத் தெரியவில்லையா? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முந்தைய அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியது.