அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம்: மதிய உணவில் விரைவில் சிக்கன் பிரியாணி? அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் விரைவில் சிக்கன் பிரியாணியை சேர்ப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தற்போது 37,595 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 52 லட்சத்து 75 ஆயிரத்து 203 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு கற்பிக்க 2 லட்சத்து 25 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.மேலும், மாநிலத்தில் 7,289 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1,046 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் 65 மத்திய அரசு பள்ளிகள் உள்ளன.தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் சுமார் 46 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். இதில், காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் 19 லட்சத்து 34 ஆயிரம் தொடக்கப்பள்ளி மாணவர்களும் அடங்குவர்.தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவாக காய்கறி பிரியாணி, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை உள்ளிட்ட பல்வேறு வகையான கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனுடன் தினமும் முட்டையும் வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு அதற்கு பதிலாக வாழைப்பழம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க.
அரசு, பள்ளி மாணவர்களின் மதிய உணவு திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, வாரத்திற்கு ஒருமுறை மதிய உணவுடன் சிக்கன் பிரியாணி வழங்குவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இதுகுறித்து தகவல் தெரிவித்தார்.மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது தொடர்பாக கருத்துகள் சேகரிக்கப்பட்டு, அவை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இறுதி முடிவை அவர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.இதனால், ஆகஸ்டு 5-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.