அரசியல்வாதிகள் 'இல்லை' என்றும், அதிகாரிகள் 'ஆம்' என்றும் சொல்ல வேண்டும்: கவர்னர் அர்லேக்கர்
மக்களின் தேவைகளுக்கு அரசியல்வாதிகள் மறுப்பை தெரிவிக்கவும், அதிகாரிகள் தீர்வை நோக்கி செயல்படவும் வேண்டும் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் வலியுறுத்தினார்.
கோவையில் நடைபெற்ற சங்கல்ப் ஐ.ஏ.எஸ். அகாடமியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு பகுதியின் புவியியல் அமைப்பை மட்டும் அறிந்தால் போதாது; அந்த மண்ணின் வரலாறு, பண்பாடு மற்றும் கலாசாரத்தையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மற்றவர்களைப் போல சிந்திக்காமல், சமூக நலனை முன்னிறுத்தும் தனித்துவமான பார்வையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.
தான் அரசியல்வாதியாக இருந்த அனுபவத்தை பகிர்ந்த அவர், பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் பொதுவாக 'இல்லை' என்று கூறுவதில்லை என்றும், அதிகாரிகள் 'ஆம், செய்ய முடியும்' என்று உடனடியாக உறுதியளிக்க தயங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார். ஆனால், இந்த நடைமுறை மாற வேண்டும்; அரசியல்வாதிகள் தேவையான இடங்களில் 'இல்லை' என்று கூறவும், அதிகாரிகள் மக்களுக்கு உதவும் வகையில் 'ஆம், முடியும்' என்ற மனப்பான்மையுடன் செயல்படவும் வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், காலனித்துவ சிந்தனையிலிருந்து விடுபட்டு மக்களின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றார்.
சிவில் சர்வீஸ் என்பது வெறும் அதிகாரப் பதவி அல்ல; மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு என்பதை உணர்ந்து தேசப்பற்றுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தப் பொறுப்புக்கு ஏன் தாங்கள் தேர்வு செய்யப்பட்டோம் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப தங்களின் சிந்தனை மற்றும் செயல்பாட்டு அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பீஹார் மாநிலத்தில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்த ஆளுநர், அங்கு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகவும், மாணவர்கள் வகுப்பறை கல்வியுடன் மட்டுமல்லாமல், பயிற்சி மையங்களிலும் தீவிரமாகத் தயாராகிறார்கள் என்றும் கூறினார்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் திறமையானவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், தேர்வில் வெற்றி பெற்ற பிறகு ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பில் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சாதிக்க முடியாத நிலை இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், நிர்வாகப் பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், சிவில் சர்வீஸ் பணியின் மூலம் சமூக மாற்றத்தையும் நாட்டின் முன்னேற்றத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.