17 மாநிலங்களில் நடந்த தேடுதல் வேட்டை: 101 குழந்தைகளை பத்திரமாக மீட்ட ஒடிசா காவல்துறை
புவனேஸ்வரம்: ஒடிசாவைச் சேர்ந்த 101 சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை 17 மாநிலங்களில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக சொந்த மாநிலத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணாமல் போன குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மீட்டு குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கும் நோக்கில், ஒடிசா காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு சார்பில் ‘ஆபரேஷன் அன்வேஷன்’ என்ற சிறப்பு நடவடிக்கை கடந்த 2 வாரங்களாக நடத்தப்பட்டது. இதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவுக்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான அதிகாரி மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி ஆகியோர் தலைமை வகித்தனர். சம்பந்தப்பட்ட மாநிலங்களில் சுமார் 10 முதல் 12 நாட்கள் தங்கியிருந்த தனிப்படையினர், அங்குள்ள போலீசார் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் நடவடிக்கை சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், அசாம், பீகார், ஜார்க்கண்ட், ஹரியானா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கேரளா ஆகிய 17 மாநிலங்களில் நடைபெற்றது. மீட்கப்பட்ட குழந்தைகளில் சிலர் கடத்தப்பட்டிருந்ததும், சிலர் குழந்தைத் தொழிலாளர்களாக பணியாற்றி வந்ததும், மேலும் சிலர் குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.