Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 11 செப்டம்பர் 2026 | 26 ஆவணி பராபவ வருடம்

மகாகவி பாரதியார் நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

மகாகவி பாரதியார் நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

மகாகவி பாரதியார் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னச்சாமி அய்யர் – இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எட்டயபுரத்தில் தனது தொடக்கக் கல்வியை பயின்ற அவர், சிறுவயதிலேயே தமிழில் கவிதை எழுதும் திறனை வெளிப்படுத்தினார். தனது 11-வது வயதில் புலவர்கள் அவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினர். தந்தை மறைந்தபின், தனது 15-வது வயதில் சில காலம் காசிக்குச் சென்ற பாரதியார், அங்குள்ள ஜெய்நாராயண் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்றார். 1898-ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் 1902-ஆம் ஆண்டு எட்டயபுரம் அரசவையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். 1904-ஆம் ஆண்டு மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்தார். அதன்பிறகு ஜி. சுப்பிரமணிய அய்யரின் அழைப்பின் பேரில் சென்னை வந்த அவர், “சுதேசமித்திரன்” நாளிதழில் உதவி ஆசிரியராகவும், “இந்தியா” வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1910-ஆம் ஆண்டு “கர்மயோகி” என்ற மாத இதழையும் தமிழில் நடத்தினார். கவிதை எழுதுவதையும், நாட்டுக்காக உழைப்பதையும் தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்ட பாரதியார், சுதேசமித்திரன், இந்தியா, சக்கரவர்த்தினி, பாலபாரதா உள்ளிட்ட பத்திரிகைகளில் கட்டுரைகள் மற்றும் கவிதைகளை தொடர்ந்து வெளியிட்டார். அவற்றின் வாயிலாக மக்களிடையே விடுதலை உணர்வையும் நாட்டுப்பற்றையும் வளர்த்தார். தாய்நாட்டின் மீது ஆழ்ந்த பெருமிதம் கொண்டிருந்த பாரதியார், நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்த தொலைநோக்குச் சிந்தனையையும் கொண்டிருந்தார். கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும், நாட்டின் வளங்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தனது படைப்புகளில் வெளிப்படுத்தினார்.

Advertisement
விடுதலைக்கு முன்பே நதிநீர் இணைப்பு குறித்த சிந்தனையையும் தனது பாடலில் பதிவு செய்திருந்தார். ஆண், பெண் சமத்துவத்தையும் பெண் விடுதலையையும் வலியுறுத்தியவர் பாரதியார். பெண்கள் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றம் பெற வேண்டும் என்ற கருத்துகளை தனது கவிதைகள் மூலம் வலிமையாக எடுத்துரைத்தார். நூற்றுக்கணக்கான சிறு கவிதைகளை எழுதியுள்ள பாரதியார், *கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலியின் சபதம்* உள்ளிட்ட தொடர்கவிதைகளையும் படைத்துள்ளார். *சின்னச் சங்கரன் கதை, ஞான ரதம், சந்திரிகையின் கதை* உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மகாகவி பாரதியார் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லமும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வசித்த இல்லமும் நினைவு இல்லங்களாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி “மகாகவி நாள்” ஆகக் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு மகாகவி நாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 11) சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசு மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் த. சரத்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு