13 முன்னாள் வீரர்களுக்கு ஓய்வூதியம்; 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கினார். அதேபோல், 3 பேருக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகள், ஓய்வூதிய நிலுவைத் தொகைக்கான காசோலைகள் மற்றும் 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்தி வரும் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 13 முன்னாள் வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளுடன் ரூ.9.36 லட்சம் மதிப்பிலான ஓய்வூதிய நிலுவைத் தொகைக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. மேலும், 3 குடும்ப ஓய்வூதிய பயனாளர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளுடன் ரூ.4.77 லட்சம் மதிப்பிலான நிலுவைத் தொகைக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.இதனுடன், 4 பெண் பயிற்றுநர்கள் மற்றும் 2 ஆண் பயிற்றுநர்கள் என மொத்தம் 6 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.விளையாட்டுத் துறைக்கு சிறப்பான சேவையாற்றிய முன்னாள் வீரர்களின் பங்களிப்பை மதிப்பளிக்கும் நோக்கிலும், ஓய்வுக்குப் பிந்தைய அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், 58 வயதை கடந்த பொருளாதாரத்தில் நலிந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது 82 முன்னாள் விளையாட்டு வீரர்களும், 13 குடும்ப ஓய்வூதிய பயனாளர்களும் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.இந்த நிகழ்வில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், பொது மேலாளர் சுஜாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.