விவசாயிகள் எதிர்க்கும் வெளிமாநில மக்காச்சோள விதைகளை திணிக்கக்கூடாது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வெளிமாநில மக்காச்சோள விதைகளை கட்டாயப்படுத்தி வழங்குவதை தமிழ்நாடு வேளாண் துறை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விதைகளைத் தேர்வு செய்து வாங்கும் உரிமை விவசாயிகளுக்கே இருக்க வேண்டும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: துறை பரிந்துரைக்கும், விவசாயிகள் விரும்பாத மக்காச்சோள விதைகளால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காமல் பெரும் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அவர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கான தீவனத்துக்கும், எத்தனால் உற்பத்திக்கும் மக்காச்சோளத்தின் தேவை அதிகமாக உள்ளது. எனவே, எதிர்காலத்தில் மக்காச்சோள சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.இந்தச் சூழலை பயன்படுத்தி, வீரிய ரகம் மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய விதைகள் எனக் கூறி கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து ‘அட்லாண்டா-752’ என்ற மக்காச்சோள விதைகள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவிலான ஒப்பந்தம் பெற்ற ஒரே நபர் மூலம் வேளாண் துறை இந்த விதைகளை விநியோகித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் ஆகியவற்றின் கீழ் கிலோவுக்கு ரூ.100 மானியத்திலும் இவ்விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.அதிக மகசூல் கிடைக்கும் என வேளாண் துறை பிரசாரம் செய்ததால், விவசாயிகள் அதிகளவில் இந்த விதைகளை வாங்கி பயிரிட்டனர். ஆனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. கடந்த காலங்களில் பயன்படுத்திய உள்ளூர் ரக விதைகளுடன் ஒப்பிடும்போது சுமார் 50 சதவீதம் மட்டுமே மகசூல் கிடைத்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்.தொடர்ச்சியான இழப்பால், அரசு மானியம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; தனியார் விதைக் கடைகளில் விதைகளை வாங்கி பயிரிடுவோம் என்ற நிலைக்கு விவசாயிகள் வந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வெளிமாநில விதைகளையே வாங்க வேண்டும் என்று வேளாண் துறை தொடர்ந்து வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதை தேவைப்படும் நிலையில், அதற்கான ரூ.400 மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.1,600 தொகையை விவசாயிகள் செலுத்தி விதைகளை வாங்க வேண்டியுள்ளது.தமிழ்நாட்டில் பெரம்பலூர், சேலம், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் பாசனம் மற்றும் மானாவாரி முறையில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையும் அதிகரித்து வருவதால் சாகுபடி பரப்பும் விரிவடைந்து வருகிறது.கடந்த ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் ‘ஹில்’ என்ற ஒரே ஒப்பந்ததாரருக்கு டெண்டர் வழங்கப்பட்டு, ஆண்டுதோறும் 1,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான விதைகள் விற்பனைக்கு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.2023-ம் ஆண்டு இந்த விதைகளை வாங்கி பயிரிட்டபோது, சில இடங்களில் மக்காச்சோளக் கதிர்களே உருவாகவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 2024-ம் ஆண்டு விவசாயிகள் விதைகளை வாங்க மறுத்த நிலையில், வேறு ரகம் எனக் கூறி அவை வழங்கப்பட்டதாகவும், அந்த விதைகளும் குறைந்த மகசூலையே அளித்ததாகவும் சங்கம் கூறியுள்ளது.