பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த அபிஜீத் திப்கேவுக்கு, பிரபல அமெரிக்க பாடகி மேரி மில்பென் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து, இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காந்தி ஜெயந்தியன்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அண்மையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டது. இதற்கிடையே, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆதரவாளர்கள் கைவிட்டுவிடுவார்கள்: மில்பென் எச்சரிக்கை இந்தச் சூழலில், அமெரிக்க பாடகி மேரி மில்பென் தனது எக்ஸ் தளப் பதிவில் அபிஜீத் திப்கேவுக்கு அறிவுரை கூறியுள்ளார். உண்மை அனைவருக்கும் விடுதலையைத் தரும் என்றும், அது திப்கேவுக்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெற்றிபெறத் தவறினால், சூடான கேக்கைக் கைவிடுவதைப் போல அமெரிக்க நன்கொடையாளர்கள் அவரைக் கைவிட்டுவிடுவார்கள் என எச்சரித்துள்ளார். சட்டத்துக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது வெற்றிக்கான வழியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
தனது அமெரிக்கக் கல்வியையும் திறமைகளையும் நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்துமாறு திப்கேவிடம் கேட்டுக்கொண்ட மில்பென், பிரதமர் மோடியுடன் இணைந்து அமர்ந்து, நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவான குரலாகச் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். சரியான முடிவை எடுப்பதற்கான உண்மையான துணிச்சல் அவரது அடுத்தகட்ட நடவடிக்கையிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஆதரவு தேவையா? முன்னதாக, அபிஜீத் திப்கே தனது சமூக வலைதளப் பதிவில், இந்திய மக்களை அவமதிப்பதைப் போல பிரதமர் மோடி ஏன் அமெரிக்க ஆதரவைக் கோருகிறார் என்றும், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வெளிநாட்டினருக்கு அதிகாரம் அளித்தது யார் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே மில்பென் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடிக்கு இந்திய மக்களிடையே வலுவான ஆதரவு இருப்பதாகத் தெரிவித்த மில்பென், அவருக்கு அமெரிக்கர்களின் ஆதரவு தேவையில்லை என்றும் கூறியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக 150 கோடி இந்திய மக்களின் ஆதரவை மோடி பெற்று வருவதாகவும், அதில் 12 ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றியுள்ளதுடன் தொடர்ந்து மூன்று முறை அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2029-ம் ஆண்டிலும் மோடி மக்களின் ஆதரவைப் பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவே உண்மை என்றும் மில்பென் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.