விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வெளிமாநில மக்காச்சோள விதைகளை கட்டாயப்படுத்தி வழங்குவதை தமிழ்நாடு வேளாண் துறை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விதைகளைத் தேர்வு செய்து வாங்கும் உரிமை விவசாயிகளுக்கே இருக்க வேண்டும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: துறை பரிந்துரைக்கும், விவசாயிகள் விரும்பாத மக்காச்சோள விதைகளால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காமல் பெரும் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அவர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கான தீவனத்துக்கும், எத்தனால் உற்பத்திக்கும் மக்காச்சோளத்தின் தேவை அதிகமாக உள்ளது. எனவே, எதிர்காலத்தில் மக்காச்சோள சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.இந்தச் சூழலை பயன்படுத்தி, வீரிய ரகம் மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய விதைகள் எனக் கூறி கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து ‘அட்லாண்டா-752’ என்ற மக்காச்சோள விதைகள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவிலான ஒப்பந்தம் பெற்ற ஒரே நபர் மூலம் வேளாண் துறை இந்த விதைகளை விநியோகித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் ஆகியவற்றின் கீழ் கிலோவுக்கு ரூ.100 மானியத்திலும் இவ்விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.அதிக மகசூல் கிடைக்கும் என வேளாண் துறை பிரசாரம் செய்ததால், விவசாயிகள் அதிகளவில் இந்த விதைகளை வாங்கி பயிரிட்டனர். ஆனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. கடந்த காலங்களில் பயன்படுத்திய உள்ளூர் ரக விதைகளுடன் ஒப்பிடும்போது சுமார் 50 சதவீதம் மட்டுமே மகசூல் கிடைத்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்.தொடர்ச்சியான இழப்பால், அரசு மானியம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; தனியார் விதைக் கடைகளில் விதைகளை வாங்கி பயிரிடுவோம் என்ற நிலைக்கு விவசாயிகள் வந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வெளிமாநில விதைகளையே வாங்க வேண்டும் என்று வேளாண் துறை தொடர்ந்து வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதை தேவைப்படும் நிலையில், அதற்கான ரூ.400 மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.1,600 தொகையை விவசாயிகள் செலுத்தி விதைகளை வாங்க வேண்டியுள்ளது.தமிழ்நாட்டில் பெரம்பலூர், சேலம், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் பாசனம் மற்றும் மானாவாரி முறையில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையும் அதிகரித்து வருவதால் சாகுபடி பரப்பும் விரிவடைந்து வருகிறது.கடந்த ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் ‘ஹில்’ என்ற ஒரே ஒப்பந்ததாரருக்கு டெண்டர் வழங்கப்பட்டு, ஆண்டுதோறும் 1,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான விதைகள் விற்பனைக்கு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.2023-ம் ஆண்டு இந்த விதைகளை வாங்கி பயிரிட்டபோது, சில இடங்களில் மக்காச்சோளக் கதிர்களே உருவாகவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 2024-ம் ஆண்டு விவசாயிகள் விதைகளை வாங்க மறுத்த நிலையில், வேறு ரகம் எனக் கூறி அவை வழங்கப்பட்டதாகவும், அந்த விதைகளும் குறைந்த மகசூலையே அளித்ததாகவும் சங்கம் கூறியுள்ளது. மேலும், விதைகளின் முளைப்புத் திறன் 20 சதவீதத்தைக்கூட எட்டவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.2025-ம் ஆண்டிலும் இதே எதிர்ப்பு தொடர்ந்த போதிலும், தற்போது மீண்டும் இந்த விதைகள் வேளாண் டெப்போக்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது. வேறு ஊட்டச்சத்து பொருட்களை வாங்க வேண்டுமெனில் இந்த விதைகளையும் கட்டாயமாக வாங்க வேண்டும் என விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.தனியார் விதைக் கடைகளில் ஒரு ஏக்கருக்கான விதைகளுக்கு ரூ.3,000 வரை கூடுதலாக செலவானாலும், அவற்றையே வாங்கி பயிரிடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். தனியார் விதைகள் மூலம் ஒரு ஏக்கருக்கு 30 முதல் 35 மூட்டைகள் வரை மகசூல் கிடைப்பதாகவும், வேளாண் துறை வழங்கும் விதைகளால் 20 மூட்டைகள்கூட கிடைப்பதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.இதனிடையே, நடப்பு பருவத்துக்கான விதைகளை கோவை மாவட்டத்தில் இருந்து லாரிகளில் சேலம் மாவட்ட கிடங்குகளுக்கு கொண்டு வந்தபோது, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அந்த லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார் விதைக் கடைகளில் தாங்களே விதைகளை வாங்கி பயிரிட அனுமதிக்க வேண்டும் என்றும், வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு கிலோவுக்கு ரூ.100 வீதம் அரசு பின்னேற்பு மானியம் வழங்கினால் போதுமானது என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், வேளாண் துறை வழங்கும் விதைகளை வாங்கினால் மட்டுமே மானியம் கிடைக்கும் என அதிகாரிகள் வலியுறுத்துவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.தரமற்றதாகவும், குறைந்த முளைப்புத் திறன் கொண்டதாகவும் கருதப்படும் விதைகளை விவசாயிகள் வாங்காததால், கடந்த ஆண்டு ஒரு பகுதி விதைகள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. விதைகள் விற்பனை ஆகாமல் போனால், அதற்கான தொகையை வேளாண் துறையின் கள அலுவலர்களே செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஐந்து ரகங்களைச் சேர்ந்த 1,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான விதைகள் இதுபோன்று கொண்டு வரப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் தன்மைக்கு இந்த விதைகள் ஏற்றதாக இல்லை என்றும், அவற்றை சாகுபடி செய்வதால் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் நிலத்துக்கு ஏற்ற விதைகளை அவர்களே தேர்வு செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும்வலியுறுத்தியுள்ளது.விதைகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் சுதந்திரமும் விவசாயிகளுக்கே உரியது என்பதால், விநியோகஸ்தரின் விருப்பத்திற்கு ஏற்ப வேளாண் துறை செயல்படக்கூடாது என்றும் சங்கம் கூறியுள்ளது.எனவே, வேளாண் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, விவசாயிகள் விரும்பும் உள்ளூர் மக்காச்சோள ரக விதைகளை போதிய அளவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விதைகளுக்கான மானியத் தொகையை உயர்த்தி வழங்குவதற்கும் அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.