வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பாக ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு எதிராக இண்டியா கூட்டணிக் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளுக்கு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இண்டியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டை நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி இந்தக் கோரிக்கையை முன்வைத்து கடந்த 12-ம் தேதி உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.ஆர். நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
இந்த மனுவில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகதா ராய், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா உள்ளிட்ட 13 பேர் மனுதாரர்களாக இடம்பெற்றுள்ளனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் மஹுவா மாஜி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் முகமது பஷீர் உள்ளிட்டோரும் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு இந்த வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர். தொடர்பாக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட முடிவுகள் மற்றும் அந்த நடைமுறையைச் செயல்படுத்திய விதம் குறித்த அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த விசாரணையின்போது மனுதாரர்களில் ஒருவரின் நடத்தை தொடர்பாகக் கேள்வி எழுப்ப விரும்புவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.