வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டாலும் குடியுரிமை பறிபோனதாக கருத முடியாது: உச்ச நீதிமன்றம் விளக்கம்
வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நீக்கப்படுவது மட்டும், அவரது இந்திய குடியுரிமை ரத்து செய்யப்பட்டதாகவோ அல்லது பறிக்கப்பட்டதாகவோ பொருள் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் எஸ்ஐஆர் (SIR) பணிகள் மூன்றாம் கட்டமாக நடைபெற்று வருகின்றன. இந்த நடவடிக்கையின் காரணமாக ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 33 லட்சம் பேர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் பணிகளின் போது சந்தேகத்திற்குரிய வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், அவர்களுக்கு அரசின் சமூக நலத் திட்டங்களின் பலன்களும் மறுக்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குடியுரிமை தொடர்பாக சந்தேகம் எழுந்தால், அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியும் என தெரிவித்தது.
அதே நேரத்தில், ஒருவர் இந்திய குடிமகனா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
மேலும், பீஹார் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற எஸ்ஐஆர் தொடர்பான வழக்குகளின் விசாரணையின்போதும், குடியுரிமையை நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்ற நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியிருப்பதையும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.