வேலைக்கு போகாததை கண்டித்த தந்தை... ஆத்திரத்தில் மகன் செய்த அதிர்ச்சி செயல்
வேலூர் மாவட்டத்தில் வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையாக இருந்த மகனை கண்டித்த தந்தை, மகனால் கத்தியால் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் சலவன்பேட்டை அம்மணாங்குட்டை சாலையைச் சேர்ந்த 70 வயதான சந்திரன் மற்றும் அவரது 42 வயது மகன் சக்திவேல் ஆகியோர் தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சக்திவேலுக்கு இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், மது பழக்கத்தால் அவர் தொடர்ந்து வேலைக்குச் செல்லாமல் வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது இரு மனைவிகளும் பிரிந்து சென்றுள்ளனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த சக்திவேலை, வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி சுற்றித்திரிவது குறித்து அவரது தந்தை சந்திரன் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல், கத்தியால் சந்திரனை தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சந்திரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சக்திவேலை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த இந்த சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.