‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்டர்நெட்டுடன் இணைக்கப்படுவதில்லை’ – தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோல்வின் தாலுக்தார்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இந்திய ஜனநாயகம், தேர்தல் நடைமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மை மற்றும் இளம் வாக்காளர்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவர்கள் கேள்விகளை எழுப்பினர்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஞானேஷ் குமார், இந்தியாவில் பயன்படுத்தப்படும் EVM-கள் பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார். மேலும், இந்த இயந்திரங்கள் இன்டர்நெட், புளூடூத், வைஃபை உள்ளிட்ட எந்தவொரு வயர்லெஸ் தொழில்நுட்பத்துடனும் இணைக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.சமூக ஊடகங்களில் தகவல்கள் வேகமாக பரவும் சூழலில், அவற்றை பகிர்வதற்கு அல்லது நம்புவதற்கு முன்பு அதன் மூலத்தையும் உண்மைத்தன்மையையும் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
எந்த தகவலாக இருந்தாலும், அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்த பிறகே ஏற்றுக்கொள்வது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.இந்தியாவில் சுமார் 100 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இவ்வளவு பெரிய அளவிலான வாக்காளர்களுக்குத் தேர்தலை நடத்துவது மிகப்பெரிய பணியாகும் என்றும் ஞானேஷ் குமார் தெரிவித்தார். தேர்தல் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக ஏராளமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.