Skip to main content
🌤️ —°C
வியாழன் | 30 ஜூலை 2026 | 14 ஆடி பராபவ வருடம்

மதுரை மீனாட்சி கோவிலின் ரூ.60 கோடி சொத்து முறைகேடு: 19 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு

மதுரை மீனாட்சி கோவிலின் ரூ.60 கோடி சொத்து முறைகேடு: 19 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கான சேவைகளுக்காக நிறுவப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான சுமார் ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் தொடர்பாக பட்டா மாற்றம், பத்திரப்பதிவு மற்றும் அடமானப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடு விவகாரத்தில் 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நடவடிக்கை, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் இணை ஆணையரும் செயல் அலுவலருமான செல்லத்துரை அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து மோசடி மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வருவதற்கு அறப்போர் இயக்கம் அளித்த புகாரும் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.1930-ஆம் ஆண்டு சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட உயில் சாசனத்தின்படி, மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அசோகா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்குச் சொந்தமானதாகும். அந்த உயிலின் நிபந்தனைகளின்படி, சொத்தை வாடகைக்கு விட மட்டுமே அனுமதி உள்ளது; விற்பனை, அடமானம் அல்லது உரிமை மாற்றம் செய்ய இயலாது.இந்நிலையில், 2016 ஜூன் 24 அன்று மதுரை வடக்கு முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், கோவில் பெயரில் இருந்த உரிமையை நீக்கி, ராமாயி ஆயியார் உள்ளிட்ட 9 பேரின் பெயருக்கு சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், முன்னாள் வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கையும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.பின்னர், சம்பந்தப்பட்ட தாசில்தாரின் உத்தரவை வருவாய் கோட்டாட்சியர் ரத்து செய்து, அந்த நிலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்குச் சொந்தமான அறக்கட்டளையின் சொத்துதான் என உறுதி செய்து, மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்ற உத்தரவிட்டார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்காலத் தடையாணையும் வழங்கப்பட்டிருந்தது.ஆனால், அந்த நீதிமன்றத் தடையை மறைத்து, 2021 ஏப்ரல் 16 அன்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகார ஆவணம் பதிவு செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து 2021 ஜூலை 19 அன்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நில அடமானப் பத்திரமும் பதிவு செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ராமாயி ஆயியார், செந்தமிழ்ச் செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், இளையராஜா, அனிஷ், அனந்தராமன், கவிதா, பிரகாஷ், காளிக்குமார் மற்றும் பிரசாந்த் சந்தான கருப்பன் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவிலுக்குச் சொந்தமான கட்டளை நிலங்களை அபகரிக்கும் நோக்கில் கூட்டுச் சதி செய்து, நீதிமன்ற உத்தரவுகளையும் பத்திரப்பதிவுச் சட்ட விதிகளையும் மீறி பட்டா மாற்றம், பத்திரப்பதிவு மற்றும் அடமானப் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அனைவரிடமும் மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் முறைகேடாக தனிநபர்களின் பெயரில் முறப்பநாடு மற்றும் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
Advertisement
இந்த விவகாரம் தொடர்பாக 2023-ஆம் ஆண்டு அறப்போர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது 19 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதை வரவேற்பதாக தெரிவித்துள்ள அறப்போர் இயக்கம், பத்திரப்பதிவுத் துறையின் பிரிவு 28 எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து மேற்கொண்ட ஆய்வின் போது இந்த முறைகேடு கண்டறியப்பட்டதாக கூறியுள்ளது. இதில் தொடர்புடையதாக கூறப்படும் இளையராஜா என்பவர், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியுடன் இணைந்து சென்னை ஒரு ஏக்கர் நிலம் தொடர்பாக ராதாபுரத்தில் ஒப்பந்தப் பத்திரப்பதிவு செய்ததாகவும், அறப்போர் புகாரைத் தொடர்ந்து அந்தப் பதிவு 2023-இல் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அந்த விவகாரத்திலும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஆய்வின் போதே இதே நபர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில விவகாரத்திலும் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததாகவும், தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு