புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது: இன்று அமித்ஷா வழங்குகிறார்
புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்படும் ‘ஜனாதிபதியின் வண்ணக்கொடி’ விருதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வழங்குகிறார். இதற்காக நேற்று இரவு புதுச்சேரி வந்த அவரை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மராட்டிய மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமித்ஷா, பின்னர் விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து மாலை 4.15 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர், மாலை 5.20 மணியளவில் திருவண்ணாமலை சென்றடைந்தார்.முதலில் ரமண ஆசிரமத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவரது பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ஹெலிபேடில் இருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா, மாலை 5.30மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவிலை சென்றடைந்தார்.கோவில் கோபுரம் வழியாக உள்ளே சென்ற அவருக்கு சிவாச்சாரியார்கள் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சாயரட்சை பூஜையில் பங்கேற்ற அமித்ஷா, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்திலும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதற்கு முன்பு சம்பந்த விநாயகரையும் வழிபட்டார். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதையடுத்து பே கோபுரம் வழியாக கோவிலில் இருந்து வெளியே வந்த அமித்ஷா, அங்கு திரண்டிருந்த பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து கையசைத்தார். பின்னர் காரில் ரமண ஆசிரமத்திற்கு புறப்பட்டார். கிரிவலப்பாதை முழுவதும் பா.ஜனதா தொண்டர்களும் பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.மாலை 6.30 மணியளவில் ரமண ஆசிரமத்தை சென்றடைந்த அமித்ஷா, அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் மாலை 6.55 மணிக்கு காரில் புறப்பட்ட அவர், இரவு 8.30 மணியளவில் புதுச்சேரி வந்தடைந்தார்.கவர்னர் மாளிகைக்கு வந்த அமித்ஷாவை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, வி.பி.சிவக்கொழுந்து, ராஜசேகரன், செல்வகணபதி எம்.பி., பா.ஜனதா மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வரவேற்றனர்.அமித்ஷா வருகையையொட்டி கோரிமேடு எல்லையில் இருந்து கவர்னர் மாளிகை வரையிலான பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் புதுவை போலீசார் என 1,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். புதுவை மாநில எல்லைகள் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.கவர்னர் மாளிகையில் இரவு தங்கிய அமித்ஷா, இன்று காலை 8 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கோரிமேடு போலீஸ் மைதானத்திற்கு செல்கிறார். காலை 8.15 மணி முதல் 10.10 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், புதுச்சேரி காவல்துறைக்கு ‘ஜனாதிபதியின் வண்ணக்கொடி’ விருதை வழங்கி உரையாற்றுகிறார்.இதனைத் தொடர்ந்து காலை 10.15 மணிக்கு அங்கிருந்து புறப்படும் அமித்ஷா, ராஜீவ்காந்தி சிலை சதுக்கத்தில் உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், பகல் 12 மணி முதல் 1 மணி வரை கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.பின்னர் அங்கேயே மதிய உணவு சாப்பிடும் அமித்ஷா, பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு முருகா தியேட்டர் சந்திப்புக்கு செல்கிறார். அங்கு ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி’ என்ற ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து மதியம் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்படுகிறார்.அமித்ஷா வருகையை முன்னிட்டு இன்று காலை கவர்னர் மாளிகையில் இருந்து கோரிமேடு வழியாக புதுச்சேரி விமான நிலையம் செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிரோன்கள், ஆள் இல்லாத விமானங்கள் உள்ளிட்ட வான்வழி சாதனங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், இன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அமித்ஷா பயணம் செய்யும் சாலைகளில் உள்ள கள், சாராயம் மற்றும் மதுக்கடைகளை மூட கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.அமித்ஷா வருகையை தொடர்ந்து கவர்னர் மாளிகை, நிகழ்ச்சி நடைபெறும் கோரிமேடு போலீஸ் மைதானம் மற்றும் அக்கார்டு ஓட்டல் ஆகியவை முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.போக்குவரத்து மாற்றம் காரணமாக புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.