‘பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உலக நலன் தொடர்பாக ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும்’ - பிரதமர் மோடி
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைப்பு நாடுகளாக இடம்பெற்றுள்ளன. 2026-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. ‘வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்தியா தனது தலைமைப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பொதுவான முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய, பிராந்திய அளவிலான முக்கிய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. இந்தியா இதற்கு முன்பு 2012, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளது. இந்நிலையில், 4-வது முறையாக 2026-ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.