திருப்பதியில் திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை மீட்பு; ஆகம விதிகளின்படி மீண்டும் பிரதிஷ்டை
திருமலை–திருப்பதி மலைப்பாதையில் இருந்து திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை சம்பவம் நடந்த 14 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டது. இதையடுத்து, ஆகம விதிகளுக்கு இணங்க அந்த சிலை இருந்த அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.திருமலையில் இருந்து திருப்பதி நோக்கிச் செல்லும் முதல் மலைச்சாலையின் 7-வது மைல் பகுதியில் பெரிய ஆஞ்சநேயர் சிலை அமைந்துள்ளது. அதன் அருகில், பல ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் தினமும் வழிபட்டு வந்த சுமார் ஒரு அடி உயரம் கொண்ட கல்லால் செய்யப்பட்ட சிறிய ஆஞ்சநேயர் சிலை இருந்தது. இந்த சிலையை ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை திருடிச் சென்றார்.சம்பவத்தையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், ஜீப்பில் வந்த அந்த நபர் 7-வது மைல் ஆஞ்சநேயர் சிலை அருகே சில நேரம் தங்கி, பின்னர் அலிபிரி நடைபாதை தொடங்கும் பகுதி அருகே இறங்கிச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து, திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். சுப்பராயுடு உத்தரவின்படி குற்றவாளியை பிடிக்க 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.விசாரணையின் தொடர்ச்சியாக, ஓங்கோல் ரயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிச் சென்ற நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 35 வயதான ஜஸ்வந்த்குமார் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும் மீட்கப்பட்டது. பின்னர் அவரை திருப்பதிக்கு அழைத்து வந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, திருமலை–திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலர் சி.எச். வெங்கையா சவுத்ரி, ஆகம விதிகளின்படி சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படும் என்று அறிவித்தார்.அதன்படி, நேற்று காலை 8.30 மணி முதல் 9 மணி வரை, சிலை இருந்த இடத்திலேயே புண்யாவாசனம், ஜலசம்போக்ஷணம் உள்ளிட்ட ஆகமச் சடங்குகள் நடத்தப்பட்டு, ஆஞ்சநேயர் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதுகுறித்து சி.எச். வெங்கையா சவுத்ரி கூறுகையில், நவீன தொழில்நுட்ப வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், தேவஸ்தான விழிப்புணர்வு பிரிவு பணியாளர்களின் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட காவல்துறையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் காரணமாக மிகக் குறுகிய நேரத்தில் சிலையை மீட்க முடிந்ததாக தெரிவித்தார்.மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மலைப்பாதையில் உள்ள சாலையோர சிறிய கோவில்கள் மற்றும் சிலைகளுக்கு பாதுகாப்பு கிரில்கள் அமைக்கப்படுவதுடன், உயர்தர கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளதாக கூறினார்.