தலைமைச் செயலகத்தில் புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ள முதல்-அமைச்சர் அலுவலகம்
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில் தற்போது செயல்பட்டு வரும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் அலுவலகம், புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமைச் செயலகத்தில் நிலவும் இட நெருக்கடி மற்றும் பொதுமக்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அதே வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதல்-அமைச்சரின் அலுவலகத்தை மாற்றும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன்படி, 10 மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் முதல்-அமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது நான்கு செயலாளர்களின் அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன. அந்த மாடி கடற்காட்சியை ரசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.தற்போது, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள பெரிய மாநாட்டு அரங்கமும், உணவகப் பகுதியும் முதல்-அமைச்சர் அலுவலகமாக மாற்றப்படும் வகையில் பொதுப்பணித் துறை விரைவாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.மேலும், அந்த மாடியில் இயங்கி வரும் தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, வணிக வரித் துறையின் சில பிரிவுகள் உள்ளிட்ட அலுவலகங்களும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இடமாற்றப் பணிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட தலைமைச் செயலக முதன்மைக் கட்டடத்திலிருந்து புதிய இடத்திற்கு தனது அலுவலகத்தை மாற்றும் முதல் தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.