சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா
பேரறிஞர் அண்ணா, அன்றைய மதராஸ் மாநிலத்திற்கு "தமிழ்நாடு" என்ற பெயரை வழங்கிய நாளை நினைவுகூரும் வகையில், ஜூலை 18 தமிழ்நாடு நாள் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டைய விழா சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அரங்கில், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்றது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன் வரவேற்புரை வழங்கினார்.தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரா.
நந்தனா முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ர.பா. தனுஸ்ரீ இரண்டாம் பரிசாக ரூ.30 ஆயிரம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பா. ஐஸ்வர்யா மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்றனர்.அதேபோல், பேச்சுப் போட்டியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி. கிஷோர் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா. வர்ஷா இரண்டாம் பரிசாக ரூ.30 ஆயிரம், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த க. மனிஷா மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.பரிசு வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் விழா பேருரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவில், தமிழ் வளர்ச்சி துறையின் இயக்குநர் ந. அருள் நன்றியுரை வழங்கினார் என்று தமிழக அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.