நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பிரபலமானவர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் வாயிலாக கதாநாயகனாக புதிய பயணத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில், மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
Advertisement
‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், குறிப்பாக ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் சூரியின் நடனம் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது. மீனவர்களின் வாழ்க்கை முறையையும், அவர்களைச் சுற்றியுள்ள படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளியான இரண்டு நாட்களில் ‘மண்டாடி’ திரைப்படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வித்தியாசமான கதைக்களத்துடன் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், விமர்சகர்கள் தரப்பிலும் படத்திற்கு பாராட்டுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து உலகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ‘மண்டாடி’ படக்குழு சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது.