சின்னமனூர் நகராட்சியில் சுகாதார சீர்கேடு
சின்னமனூர் நகராட்சியில் நிரந்தர ஆணையாளர் இல்லாததால் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரப் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நகராட்சியின் அன்றாட நிர்வாகப் பணிகளை கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் ஆணையாளர் உமாசங்கர், பொதுமக்களின் அத்தியாவசியப் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஓடைத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் மூன்று மாதங்களுக்கும் மேலாக சாக்கடைகள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. இதேபோல், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பறைகள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டியே இருப்பதாகவும், விஸ்வங்குளம் பூங்கா முறையான பராமரிப்பின்றி சீரழிந்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனிடையே, அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிகம் வசிக்கும் அண்ணாமலை நகர் பகுதியில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படும் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட சுத்திகரிப்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்ட நிலையிலும், குடிநீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றத்துடன் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலையில், அரசு ஊழியர்கள் தன்னிச்சையாக விடுப்பு எடுத்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சின்னமனூர் நகராட்சியின் நிர்வாக நிலை குறித்து ஏற்கனவே செய்திகள் மூலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாகவும் பொறுப்பு ஆணையாளரிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நகரில் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு சாக்கடை கலந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், சின்னமனூர் நகராட்சியில் பாதிக்கப்பட்டுள்ள அடிப்படை மற்றும் சுகாதாரப் பணிகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.