தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலரை தாக்கியதாகக் கூறப்படும் தலைமை காவலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். கடையநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் பொன்ராஜ் (40). இதே காவல் நிலையத்தில் மீனா என்ற பெண் காவலரும் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு பணி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 9-ந்தேதி காவல் நிலைய வளாகத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பு அருகே இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பொன்ராஜ், பெண் காவலர் மீனாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மீனா கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Advertisement
புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கிறிஸ்டி விசாரணை நடத்தினார். தொடர்ந்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை பொன்ராஜை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலரை தலைமை காவலர் தாக்கிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், தலைமை காவலர் பொன்ராஜை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இருவருக்கும் இடையேயான மோதலுக்கு தனிப்பட்ட விரோதமா அல்லது பணி தொடர்பான வாக்குவாதமா காரணம் என்பது குறித்து கடையநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.