சென்னையில் 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ்கள்: முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையாக, 2-ம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள 750 தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ் சேவையை முதல்-அமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார்.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக, 2-ம் கட்டத்தில் 750 புதிய ஏ.சி. தாழ்தள மின்சார பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன.இதில், முதல்முறையாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்-அமைச்சர் விஜய் மின்சார பஸ் சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும், தலைமைச் செயலக வளாகத்தில் இருந்து 5 மின்சார பஸ்களை அவர் கொடியசைத்து இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.