கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மெகா ஊழல் – அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு
கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் இந்த மையத்தைத் திறந்து வைத்தார். ஏழு தளங்களைக் கொண்ட இந்த அறிவுலகத்தில் நவீன டிஜிட்டல் நூலகம், சர்வதேச மின்னூல்கள், கணினி வசதிகள், அறிவியல் மையம், கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள நூலகத்தில் மொத்தம் 1.25 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், அங்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அதிகம் அறியப்படாத 'அகல் விளக்கு' என்ற பதிப்பகத்தின் பெயரில் வெளியான 1,800 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிற பதிப்பகங்களில் ரூ.350-க்கு விற்பனை செய்யப்படும் நாலடியார் நூலுக்கு மாற்றாக, 'சூர்யா பாலு' என்ற பெயரில் எழுதப்பட்ட 'நாலடியார் வாழ்வின் வழிகாட்டி' என்ற 300 பக்கப் புத்தகம் ரூ.1,445-க்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தப் பதிப்பகம் வெளியிட்ட சில நூல்களில் வரலாற்றுப் பிழைகள் இருப்பதாகவும் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரைக் காஞ்சி நூலை எழுதியவர் குறித்த தகவல் தவறாக இடம்பெற்றிருப்பதையும், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் எனக் குறிப்பிட்டு நந்தியின் படத்தைப் பயன்படுத்தியிருப்பதையும் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். பல புத்தகங்களில் உள்ள குறிப்புகளிலும் பிழைகள் இருப்பதாகவும், புத்தக விநியோகத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.