கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் இந்த மையத்தைத் திறந்து வைத்தார். ஏழு தளங்களைக் கொண்ட இந்த அறிவுலகத்தில் நவீன டிஜிட்டல் நூலகம், சர்வதேச மின்னூல்கள், கணினி வசதிகள், அறிவியல் மையம், கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள நூலகத்தில் மொத்தம் 1.25 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், அங்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அதிகம் அறியப்படாத 'அகல் விளக்கு' என்ற பதிப்பகத்தின் பெயரில் வெளியான 1,800 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிற பதிப்பகங்களில் ரூ.350-க்கு விற்பனை செய்யப்படும் நாலடியார் நூலுக்கு மாற்றாக, 'சூர்யா பாலு' என்ற பெயரில் எழுதப்பட்ட 'நாலடியார் வாழ்வின் வழிகாட்டி' என்ற 300 பக்கப் புத்தகம் ரூ.1,445-க்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தப் பதிப்பகம் வெளியிட்ட சில நூல்களில் வரலாற்றுப் பிழைகள் இருப்பதாகவும் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரைக் காஞ்சி நூலை எழுதியவர் குறித்த தகவல் தவறாக இடம்பெற்றிருப்பதையும், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் எனக் குறிப்பிட்டு நந்தியின் படத்தைப் பயன்படுத்தியிருப்பதையும் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். பல புத்தகங்களில் உள்ள குறிப்புகளிலும் பிழைகள் இருப்பதாகவும், புத்தக விநியோகத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இதற்கிடையே, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்மோகன், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், கோவையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையைப் படித்தபோது வேதனையும் அதிர்ச்சியும் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். தாமும் ஒரு வாசகர் என்று குறிப்பிட்ட அவர், அங்குள்ள நூல்களின் பெயர்களில் பலவற்றைத் தனது வாழ்நாளில் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்றார். குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்திடம் இருந்து மட்டும் 1,500 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அப்படியொரு பதிப்பகம் இருப்பதே தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்தார். கடந்த திமுக ஆட்சியின் பிப்ரவரி மாதத்திலேயே இந்தப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறிய அமைச்சர், இது அந்த ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலுக்கு உதாரணம் எனக் குற்றம் சாட்டினார். மேலும், பெரியார் பெயரில் அமைக்கப்பட்ட அறிவுலகத்திலேயே முறைகேடு நடைபெற்றிருப்பது வெட்கக்கேடானது என்று தெரிவித்தார். கீழடி தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு நூலில், இணையத்தில் இருந்து படங்களை எடுத்து அவை அங்கு கண்டெடுக்கப்பட்டவை எனக் காட்டியுள்ளதாகவும், அப்படியொரு சிற்பம் கீழடியில் கிடைக்கவில்லை என்றும் கூறினார். பாரதியாரின் கதைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட புத்தகத்தின் தரத்தையும் கடுமையாக விமர்சித்த அவர், பத்தாம் வகுப்பு மாணவர்கூட அதைவிடச் சிறப்பாக எழுதுவார் எனத் தெரிவித்தார்.இந்தப் புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் ராஜ்மோகன், இதில் தொடர்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிய நீதி நிலைநாட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.