தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வாழைத்தோட்டத்தில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரண்டை – சுந்தரபாண்டியபுரம் சாலையில் மாரியப்பன் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்தத் தோட்டத்தில் வாழை மற்றும் பூசணி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் தோட்டத்திற்குள் பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 45 வயது இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.