கேரளாவில் சாலை வசதி இல்லாததால் நோயாளியை தொட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கிராம மக்கள்
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இடமலக்குடி கிராமத்தில், சாலை வசதி இல்லாததால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதியவரை கிராம மக்கள் தொட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கிராம மக்கள், நீண்ட காலமாக போக்குவரத்து வசதி இல்லாததால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில், ஏற்கெனவே மோசமான நிலையில் இருக்கும் மலைப்பாதைகள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
இதனால், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் மருத்துவ சேவைகளைப் பெறுவதற்கும் கிராம மக்கள் குறைந்தபட்சம் 5 கிலோமீட்டர் தூரம் மலை வழித்தடங்களில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அந்தப் பாதைகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இடமலக்குடி பஞ்சாயத்திற்குட்பட்ட கூடல்லார்குடியைச் சேர்ந்த 75 வயதான மலையப்பன், கடந்த ஒரு வாரமாக வயிற்றுவலி, காய்ச்சல் மற்றும் உடல்வலியால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று காலை அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கிராம மக்கள் முடிவு செய்தனர்.இதையடுத்து, சேலையால் தொட்டில் போன்ற அமைப்பை உருவாக்கி, அதை மூங்கில் கம்பில் கட்டி, காட்டுப் பகுதி வழியாக மாறி மாறி தோளில் சுமந்து அவர்கள் பயணித்தனர். பின்னர் சாலை வசதி உள்ள அனைக்குளம் பகுதிக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கிருந்து ஆட்டோவில் ஏற்றி அடிமாலி தாலுகா மருத்துவமனையில்சிகிச்சைக்காகஅனுமதித்தனர்.இந்தச் சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், இடமலக்குடி மக்கள் எதிர்கொண்டு வரும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.இதற்கு முன்பும், அந்தக் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.