குருவாயூர் கோவிலில் ஆன்லைன் தரிசன முன்பதிவு சோதனை தொடக்கம்; நீண்ட வரிசைக்கு தீர்வு
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சிரமத்தை குறைக்கும் நோக்கில் ஆன்லைன் தரிசன முன்பதிவு முறை சோதனை அடிப்படையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.பக்தர்களுக்கு எளிதான மற்றும் சீரான தரிசன அனுபவத்தை வழங்குவதற்காக குருவாயூர் தேவசம் வாரியம் இந்த புதிய வசதியை செயல்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, பல மணி நேரம் காத்திருக்கும் நிலையை தவிர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.சோதனை காலத்தில் தினமும் 8 மணி நேரம் இந்த சேவை செயல்படும். ஒவ்வொரு ஒரு மணி நேரத்திலும் 300 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நாளுக்கு மொத்தம் 2,400 பேர் ஆன்லைன் முன்பதிவின் மூலம் தரிசனம் செய்ய முடியும்.
இதுகுறித்து குருவாயூர் தேவசம் தலைவர் கோபிநாத் கூறுகையில், கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் பக்தர்கள் சந்திக்கும் சிரமத்தை இந்த திட்டம் பெருமளவில் குறைக்கும் என்றார். சோதனை வெற்றிகரமாக அமைந்தால், அனைத்து நாட்களிலும் இந்த சேவையை விரிவுபடுத்த தேவசம் வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வரவிருக்கும் ஓணம் பண்டிகை மற்றும் பிற முக்கிய யாத்திரை காலங்களில் இந்த திட்டம் அதிக பயன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கோவிலுக்கு வந்தால் போதுமானது என்பதால், தரிசன நடைமுறை மேலும் எளிதாக அமையும்.இதுதொடர்பாக குருவாயூர் தேவசம் வாரியம் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், இந்த மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இடங்கள் முழுமையாக நிரம்பிவிட்டதாகவும், அடுத்த மாதத்திற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் குருவாயூர் தேவசத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுக்கான தரிசன நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆன்லைன் முன்பதிவு வசதியை பயன்படுத்தி தரிசனம் செய்த பக்தர்கள், பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமின்றி எளிதாக சாமி தரிசனம் செய்ய முடிந்ததாக தெரிவித்து, இந்த புதிய முயற்சியை வரவேற்றுள்ளனர்.