குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடைவிழா: உண்டியல் காணிக்கை ரூ.19.70 லட்சம்
தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆனி கொடைவிழா அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து, கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன.
அன்னதான உண்டியலைத் தவிர, நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்த 10 உண்டியல்கள் மற்றும் 6 தற்காலிக உண்டியல்கள் என மொத்தம் 16 உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதிலிருந்த பணம் மற்றும் நகைகள் கணக்கிடப்பட்டன.கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் ஜான்சிராணியின் வழிகாட்டுதலின் பேரில், கல்லூரி மாணவிகள், கோவில் ஊழியர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் மற்றும் தூத்துக்குடி ஆஞ்சநேயா உழவாரப் பணியாளர்கள் இணைந்து காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.உண்டியல்களில் இருந்து மொத்தமாக ரூ.19,70,037 ரொக்கப் பணம், 15 கிராம் தங்கம் மற்றும் 135 கிராம் வெள்ளி கிடைத்தது.கடந்த ஆண்டு ஆனி கொடைவிழாவின்போது கிடைத்த உண்டியல் வரவை விட இந்த ஆண்டு ரூ.3.70 லட்சம் அதிகமாக வசூலாகியுள்ளது.
எண்ணப்பட்ட காணிக்கைத் தொகை தென்திருப்பேரையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கணக்கில் செலுத்தப்பட்டது.