ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை: வீட்டிலேயே தங்கி குளித்து, உணவருந்திய கொலையாளிகள்
வங்காளதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகும் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறாமல், அங்கேயே போதைப்பொருள் பயன்படுத்தி, குளித்து, உணவு சாப்பிட்டுவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில் உள்ள மச்சுவாபாரா பகுதியில் கணபதி சக்கரவர்த்தி (65), அவரது மனைவி பிரிதிலா சக்கரவர்த்தி (50), மகள் ஆகமி (23), மகன் பிரியம் (12) ஆகியோர் வசித்து வந்தனர். ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான கணபதி சக்கரவர்த்தி தனது குடும்பத்தினருடன் கடந்த 20-ம் தேதி இரவு வீட்டில் இருந்துள்ளார்.அதன்பின்னர் வெள்ளிக்கிழமை காலை முதல் வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று வீட்டை திறந்து பார்த்தபோது, 4 பேரும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக கிடந்தனர். உடல்களை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சித்தார்த் தாஸ் (19), முக்தா தாஸ் (23) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், இருவரும் அந்த குடும்பத்தினரின் அக்கம்பக்கத்தில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.போலீசாரின் விசாரணையின்படி, சம்பவம் நடந்த 20-ம் தேதி இரவு சித்தார்த்தும் முக்தாவும் சக்கரவர்த்தி குடும்பத்தினரின் வீட்டின் மொட்டை மாடிக்கு ‘யாபா’ என்ற போதைப்பொருளை பயன்படுத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாக கூறப்படுகிறது.மொட்டை மாடியில் சத்தம் கேட்டதால் அங்கு சென்ற கணபதி சக்கரவர்த்தி, இருவரும் போதைப்பொருள் பயன்படுத்துவதை பார்த்துள்ளார். தனது அனுமதியின்றி வீட்டின் மாடிக்கு வந்து போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர் அணிந்திருந்த துணியைக் கொண்டு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மனைவியையும் இருவரும் தாக்கி கொலை செய்துள்ளனர்.
தொடர்ந்து அங்கு வந்த மகள் ஆகமியும் போராடி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 12 வயது மகன் உயிருடன் இருந்தால் தங்களைப் பற்றி போலீசாரிடம் தெரிவித்துவிடுவான் என்ற அச்சத்தில் அவனையும் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.4 பேரையும் கொலை செய்த பின்னரும் இருவரும் உடனடியாக அங்கிருந்து தப்பிச் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனர். பின்னர் அங்கேயே குளித்துவிட்டு, வீட்டில் இருந்த பேரீச்சம்பழம், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை சாப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவம் திருட்டு சம்பவம் போல் தெரிய வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த தங்க நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் துணிகளை ஆங்காங்கே வீசி, வீடு முழுவதும் கலைந்து கிடப்பது போன்ற நிலையை உருவாக்கியுள்ளனர். மேலும், குடும்பத்தினரின் செல்போன்களை எடுத்துச் சென்று தண்ணீரில் போட்டுள்ளனர்.வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததை பயன்படுத்தி இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.சித்தார்த் மீன் வியாபாரம் செய்து வருவதும், முக்தா தங்க நகை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தங்க வளையல் ஒன்றை தீயில் வைத்து பரிசோதிக்க முயன்றதற்கான தடயங்களையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.இருவரும் 4 பேரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட பேரீச்சம்பழக் கொட்டைகளில் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் கொலைக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.