தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் மீண்டும் கவனம் செலுத்தி வரும் அவர், தனது ‘அஜித்குமார் ரேசிங்’ அணியின் மூலம் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று வருகிறார்.அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாக வைத்து ‘கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். அஜித்தின் மனைவி ஷாலினி தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அஜித்தின் ரேசிங் பயணம், அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பந்தயக் களத்தில் அவர் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை மையப்படுத்தி டிரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆவணப்படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய் அளித்த பிரத்யேக பேட்டியில், இது அஜித்தின் நீண்டகால கனவுத் திட்டம் என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
அஜித்தே தன்னை நேரடியாகத் தொடர்புகொண்டு, தனது ரேசிங் அனுபவங்களைப் படமாக்குமாறு கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.மேலும், இணையதளங்களில் டிரெய்லர்கள் வெளியாகும் வழக்கத்துக்கு மாறாக, ரசிகர்கள் முன்னிலையில் திரையரங்கில் டிரெய்லர் வெளியிடப்பட்டது தங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும் விஜய் தெரிவித்தார்.கார் பந்தயக் களத்தில் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் அனைத்தும் எந்தவித புனைவும் இல்லாமல் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பந்தயத்தில் அஜித்தின் அர்ப்பணிப்பு மிகவும் தீவிரமானது என்றும், அவர் ஒரு உண்மையான ஹீரோ என்பதை தனது செயல்பாடுகள் மூலம் நிரூபித்துள்ளதாகவும் விஜய் குறிப்பிட்டார்.அஜித் ரேசிங் களத்தில் வெளிப்படுத்திய உழைப்பை நேரில் சென்று படமாக்கியது தங்களுக்கு புதிய அனுபவமாகவும் மகிழ்ச்சியான தருணமாகவும் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அனுபவம் ரசிகர்களுக்கும் ஆவணப்படத்தைப் பார்க்கும்போது முழுமையான மகிழ்ச்சியைத் தரும் என நம்புவதாக ஏ.எல். விஜய் கூறியுள்ளார்.