"கூகுளில் உன் பெயர் வருமா?"... கேலி செய்தவர்களுக்கு வெற்றியால் பதிலடி கொடுத்த வைஷ்ணவி
"கூகுளில் உன் பெயரைத் தேடினால் உன்னைப் பற்றி ஏதாவது வருமா?" என்று கேலி செய்தவர்களுக்கு, இன்று தனது சாதனைகளால் பதிலடி கொடுத்துள்ளதாக நடிகை வைஷ்ணவி சைதன்யா தெரிவித்துள்ளார்.அறிமுக இயக்குநர் ஆதித்யா ஹாசன் இயக்கத்தில், ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எபிக் பர்ஸ்ட் செமஸ்டர்’ திரைப்படம் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி, சாய் சௌஜன்யா ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வைஷ்ணவி சைதன்யா, ‘எபிக்’ படத்தில் நடித்த அனுபவம் மற்றும் தனது திரைப்பயணம் குறித்து உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துகொண்டார்.அவர் கூறுகையில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் தொடர்ந்து நடித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தற்போது ‘எபிக்’ படத்தில் நடித்திருப்பதும் தனக்கு சந்தோஷமாக இருப்பதாக கூறிய அவர், வரும் காலங்களில் மேலும் பல நல்ல படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும், ‘கடலி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கிய இயக்குநர் ஆதித்யா ஹாசனுக்கு நன்றியும் தெரிவித்தார்.தனது திரையுலகப் பயணத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட அவமதிப்பையும் வைஷ்ணவி சைதன்யா நினைவுகூர்ந்தார்.திரைத்துறையில் வாய்ப்புகளைத் தேடி வந்த ஆரம்ப நாட்களில், ஒருவர் தன்னை மிகவும் அலட்சியமாக அணுகி, தனக்கு என்ன அடையாளம் உள்ளது என்றும், தன்னை யார் நினைவில் வைத்துக்கொள்வார்கள் என்றும் கேலி செய்ததாக அவர் கூறினார்.