விடுமுறை தினம்: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
தென்காசி மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.குற்றாலத்தின் முக்கிய அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் அதிகளவில் பாய்ந்து வருகிறது. இதேபோல், மாவட்டத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் திரண்டனர்.
குறிப்பாக ஐந்தருவி, மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்ததால், அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனை ரசித்தபடியே சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளியல் போட்டனர்.அருவிகளில் குளித்த பின்னர், அருவிக்கரை பகுதிகளில் உள்ள கடைகளில் தேநீர் மற்றும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் கடைகளில் விற்பனையும் அதிகரித்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.