ரெயிலில் தவறவிட்ட 6.5 சவரன் தங்க நகைகள் மீட்பு: உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்
தாம்பரம் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரெயிலில் பெண் பயணி தவறவிட்ட 6.5 சவரன் தங்க நகைகளை தூத்துக்குடி இருப்புப்பாதை போலீசார் மீட்டு, உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த குருசாமியின் மனைவி மாரிஸ்வரி. தற்போது சென்னை முடிச்சூர் மேற்கு லட்சுமி நகரில் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அதிகாலை கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தபோது, விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் அனந்தபுரி விரைவு ரெயிலில் பயணம் செய்துள்ளார்.அப்போது அவசரத்தில், மற்றொரு பயணி வைத்திருந்த தனது பையைப் போன்ற கருப்பு நிற டிராவல் பையை ஆனந்தகுமார் தவறுதலாக எடுத்துக்கொண்டு கோவில்பட்டியில் இறங்கியுள்ளார். வீட்டுக்குச் சென்ற பின்னரே அந்தப் பை தன்னுடையது அல்ல என்பதை அவர் அறிந்தார்.இதையடுத்து, உடனடியாக அந்தப் பையை கோவில்பட்டி ரெயில் நிலைய நடைமேடை அலுவலகத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்தப் பை தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டது.சோதனையில் பைக்குள் 2 நெக்லஸ்கள், ஒரு ஜோடி ஜிமிக்கி கம்மல்கள், ஒரு ஜோடி காது மாட்டல்கள் இருந்தது தெரியவந்தது.
மேலும், பிரபல நகைக்கடையின் ரசீதும் பையில் இருந்தது.இதன் அடிப்படையில் தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். நகைகளின் உரிமையாளர் சென்னை முடிச்சூரைச் சேர்ந்த மாரிஸ்வரி என்பதை போலீசார் கண்டறிந்து அவரை தொடர்புகொண்டனர்.போலீசாரின் தகவலின்படி தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு வந்த மாரிஸ்வரி, நகைகளுக்கான உரிய ஆவணங்கள் மற்றும் அடையாளங்களை சமர்ப்பித்தார். இதையடுத்து, மொத்தம் 6.5 சவரன் எடை கொண்ட தங்க நகைகள் அவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன.தவறவிட்ட நகைகளை விரைந்து கண்டறிந்து உரியவரிடம் ஒப்படைத்த தூத்துக்குடி இருப்புப்பாதை போலீசாருக்கு மாரிஸ்வரியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.